Friday, 21 October 2011

சிறுகதை


                                                             நடிகன்



மதுரைவாசிகளுக்கு மு.ராஎன்றமு.ராஜசேகரைத்தெரியாமலிருந்தால்தான் ஆச்சர்யம்.  மதுரையில் நல்ல நாளுக்கும், நடிகர்கள் பிறந்த நாளுக்கும், கோவில் திருவிழாவுக்கும், தலைவர்களின் பிறந்த நாளுக்கும் நடக்கும் ஆண் பெரியவனா, பெண் பெரியவளா, கூட்டுக் குடும்பமா, தனிக்குடித்தனமா, பெண்வேலைக்குப் போவது நல்லதா, கெட்டதா, போன்ற ரூம் போட்டு யாரோ யோசிக்கும் தலைப்புகளில் நடக்கும் பட்டி மன்றங்களில், மதுரையின் நக்கலும் நையாண்டியும் மிக்க அவரது பேச்சுக்கள் மிகப் பிரபலம். நான் அவரைப் பற்றி அறிந்து கொண்டது ஒரு தீபாவளியன்று பார்த்த ஜெயா டிவி பட்டிமன்றத்தில். அந்த கருப்பும் சிரிப்புமான  உருவத்தை நான் இணை இயக்குனராகப் பணியாற்றும், எங்கள் படத்தின் அப்பா வேடத்திற்கு நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம்.

நான் அவரது தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அவரை நடிக்க அழைத்தபோது, என்னை அழைப்பது தெய்வத்தின் குரல் என்றார். அவருக்கு திரைப்படத்தில் நடிப்பது என்ற ரகசிய ஆசை இருந்திருக்கிறது.பகலில் வாத்தியார் வேலை , மாலை வேளைகளில் பட்டிமன்றம் என்று இருந்தவருக்கு வாய்ப்புத் தேட நேரமில்லை, சாமர்த்தியமுமில்லை. மதுரைக்கும் , சென்னைக்கும் அலைந்து அனுபவங்களை மட்டும் சேகரித்து வைத்திருந்தார். பாரதிராஜா என் அக்கா மகன், அவரிடம் சொல்லி உன்னை அவர் படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று பதினைந்து வருடங்களுக்கு முன்னால் காசு வாங்கிபோனவனை அவர் அடையாளம் காண்பிக்க முடியும் என்றார். அவன் மீது கோபமாகவும் இருந்தார்.வீட்ல அம்மா கிட்ட பாரதிராஜா பட்த்ல நடிக்கப் போறேன்னு சொல்லிட்டேன் சார். எப்போ நடிக்கற எப்போ நடிக்கறேன்னு ஒரே கேள்வி. ஏமாந்துட்டேன்னு எப்படி சொல்றது. போன வாரம் அமீரும் நானும் வ்க்போர்டு காலேஜ்ல ஒன்னா படிச்சோம்னு ஒருத்தன் வந்தான். நா அமீருக்கு காலேஜ்ல ஜீனியருன்னுட்டேன்.சினிமாக்காரன்னாலே ஏமாத்துக்காரன்னுதான் நினைச்சுக் கிட்டிருந்தேன்.உஙகள பாக்கலேன்னா இன்னும் அந்த அபிப்பிராயத்தோடதான் இருந்திருப்பேன். என்று அவர் என்னிடம் உணர்ச்சிவயப் பட்டவராக மதுரையில் பேசிய போது அவர் எங்கள் படத்தில் நடிக்கத் தேர்வாகியிருந்தார்.

கதானாயகனின் அப்பாவாக அவர் முதன் முதலில் நடிக்கத்துவங்கும் போது அவர் கைகள் நடுங்குவதை நான் உணர்ந்தேன்.ஆனால் ஆக்‌ஷன் என்ற இயக்குனரின் குரல் கேட்டதும் அவர் தேர்ந்த நடிகன் போல நடிக்கத்துவங்கிவிட்டார்.இவ்வளவுதான் நடிப்பா , நா என்னமோ ஏதோன்னுல்லா பதறிக்கிட்டிருந்தேன் என்று சிரித்தார், கதாநாயகனின் சின்ன வயது பிளாஷ்பேக் வந்தபோது, அவரை விக் வைத்து இளமையானவராக மாற்றினோம். அந்த  புகைப்படம் எனக்கு வேண்டும் என்று கேட்டார். பொதுவாக படம் வெளியாவது வரையில் படம் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை யாருக்கும் கொடுப்பதில்லை என்பது மரபு. அவரோ அதனை வாங்குவதிலேயே குறியாக இருந்தார்.கொடுங்கள் அம்மாவிடம் காட்டிவிட்டுத் தந்து விடுகிறேன் என்றார். நான் ரகசியமாக அதனை வாங்கிக் கொடுத்தேன்.

என் அம்மா புன்னகைத்தார். அது ஒரு அபூர்வமான தருணம் மிக்க நன்றி என்று அவர் புகைப்படத்தை திருப்பிக் கொடுத்தார்.அவரை ஒருநாள் படப்பிடிப்புக்கு அழைத்து வர வேண்டியது தானே என்று கேட்டேன். அம்மா படுக்கையிலிருக்கிறார். மரணம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள் என்றார். எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. அதன் பின் நீண்ட நேரம் நாங்கள் பேசிக் கொள்ளவில்லை.

படப் பிடிப்பு முடிந்து நாங்கள் சென்னைக்கு கிளம்பிய நாளன்று அவர் எங்களோடிருந்தார். பிரிவுத்துயரம் எத்தகையது என்று திருக்குறள் சொன்னார்.
பிரபல பரோட்டாக் கடைக்கு அழைத்துப் போய் வாங்கிக் கொடுத்தார்.முகவரி வாங்கிக் கொண்டார். அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்வேன் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று சிரிப்புடன சொன்னார்.

சென்னை வந்ததும் நாங்கள் எடிட்டிங் வேலைகளில் இருந்த போது அவரது போன் ஒலிக்கும். எனது காட்சிகள் சிறப்பாக வந்துள்ளதா? அனைவருக்கும் மகிழ்ச்சியா? என்று அவர் குரல் கணீரென்று ஒலிக்கும். அய்யா, டப்பிங்க்குக்கு கூப்பிடுங்கய்யா, என் குரல் இல்லன்னா எவனுக்கும் என்ன அடையாளம் தெரியாது. நடிச்சது நான்னு சொன்னாலும் இல்ல உன்ன மாதிரி யாரோம்பாய்ங்க என்று சிரிப்பார்.


ஒருநாள் அதிகாலையில் எனக்கு போன் வந்த்து. மன்னிக்க வேண்டும் நீங்கள் சென்னை வாசிகள் பின் தூங்கி பின் எழுபவர்கள். என்று தயக்கமாகச் சொல்ல, இல்லை நாங்கள் சினிமாக்காரர்கள்.வேண்டும் போது தூங்கி வேண்டும் போது எழுபவர்கள் என்று சொன்னேன். உங்கள் படத்தில் நடித்த அதிர்ஷ்டம் எனக்கு வெளிநாட்டில் பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் துபாய் போகிறேன். முதல் விமானப் பயணம் எனக்கு பயமாக இருக்கிறது என்றார். உங்களுக்கு எப்போதும் பயம் முதலில் வந்துவிடுகிறது என்றேன்.என் மனைவியும் அதைத்தான் சொல்கிறாள். முதலிரவன்று கூட அவளிடம் இப்படிப்பேசி மாட்டிக் கொண்டேன் என்று சிரித்தார்.


டப்பிங் தினத்தன்று, தனக்கு பயமாக இருப்பதாகவும், தனது கைகள் நடுங்குவதாகவும் சொன்ன போது இப்படித்தான் படப்பிடிப்பு அன்றும் சொன்னீர்கள் என்றேன். அவருக்கு ஜோடியாக நடித்த பெண்ணிற்க்கு குரல் கொடுக்க ஒரு சின்ன வயதுப் பெண் வந்திருந்தது. அதுக்கு இது எவ்வளவோ தேவலை என்றார்.நீங்க ஜோடி பிடிக்கலைன்னு சொல்லியிருந்தா நாம வேற  நடிகைய மதுரைலயே மாத்தியிருக்கலாமே என்றேன். வேண்டாம்யா படத்துல உங்க ஜோடி எப்படி? என்ன விட அழகான்னு எம் பொஞ்சாதி நோண்டி நோண்டி கேட்டுக்கிட்டிருக்கா,அழகா இல்லாம இருக்கறதால தப்பிச்சேன். ஜாடையா அம்மாகூட கேட்டுச்சு. ஜோடி பத்மினி மாதிரி இருக்குமா. இல்ல அவசரப்பட்டு பாத்த அலங்கோலம் உம் பொண்டாட்டி மாதிரி இருக்குமான்னு ஆளாளுக்கு ஒரு ஆசை. பாருங்களேன் இப்பவோ எப்பவோன்னு இழுத்துக்கிட்டுக் கிடந்தாலும் மாமியார் முறுக்க மறக்குதான்னு என்றார். இருவரும் சிரித்தோம். சரி உஙக மனைவி அழகா என்று கேட்டேன். சொல்லிகிறவேண்டியதுதான், என்று சிரித்தார். அது விளையாட்டு சிரிப்பு என்று எனக்கு புரிந்தது.

இசைக்கோர்ப்பு வேலைகள் நடந்த அன்று மூன்று முறை அவரிடமிருந்து போன் வந்துவிட்டது. படம் எப்படி? படம் எப்படி? நான் நன்றாக வந்திருப்பதாகச் சொன்னேன். எப்படி வராம இருக்கும். எவ்வளவு உழைப்ப போட்டிருக்கீங்க . கண்டிப்பா நல்லா வரும்யா.. வரும். ஆனால் சிக்கல் வேறு ரூபத்தில் வந்தது. படம் சற்று நீளமாக இருந்தது. நீளம் சுருக்க என்ன செய்யலாம் என்று அனைவரிடமும்  கருத்துக் கேட்கப்பட்டது. நான் மலேசியாவில் எடுத்த ஒரு பாடலைக் குறிப்பிட்டிருந்தேன். பலர் கதாநாயகனின் வீட்டு சீனையும், சின்னவயது பிளாஷ்பேக் காட்சிகளையும்,  சொன்னார்கள். நான் திடுக்கிட்டுப் போனேன். எனக்கு மூராவின் ஞாபகம் வந்தது.இது எடிட் செய்யப்பட்டால் மூ.ரா பட்த்திலேயே இருக்க மாட்டார். இந்த விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது அவ்ர் இரண்டு முறை போன் செய்தார். எதுக்கு சார் மறுபடி மறு படி போன், நான் கொஞ்சம் வேலையா இருக்கேன், ஃப்ரீயானா  நானே பேசுவனே என்றேன். எதோ கோபத்த்ல இருக்கீஙகன்னு புரியுது. மன்னிக்கணும். படம் எப்போ ரிலீஸ். அம்மா நிலமை மோசமாயிட்டுது. அம்மா படத்த பாக்கணும்னு சொல்லுதாங்க. அதுக்காகத்தான் உயிர கையில புடிச்சுக்கிட்டு இருக்கறதா சொல்லுதாங்க என்று சொன்னபோது நான் மவுனமாக இருந்தேன்.என்ன எதாவது பிரச்சினையா? என்றார். சரி அப்புறமா பேசறேன் என்றபோது கூட என்னால் மவுனமாகத்தான் இருக்க முடிந்தது.

நான் இது பற்றி டைரக்டர் கௌரவ்விடம் பேசவில்லை. அவசியமில்லாததை சினிமா தானாகவே துண்டித்துவிடும் என்று எனக்குத்தெரியும்.படத்தை அப்படியே வெளியிடுவது. ஆடியன்ஸ் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பது பார்த்து அவர்களுக்குப் பிடிக்காத காட்சியை எடிட் செய்வது என்று முடிவாயிற்று. காட்சிகள் பிடிக்காவிட்டால் கூட ஜனங்கள் அமைதியாக இருப்பார்கள். பாடல் சரியில்லை என்றால் வெளிநடப்பு செய்வார்கள் என்ற என் அபிப்பிராயத்தை மீண்டும் சொன்னேன்.சிமாவில் சரியான நேரத்தில் சரியான அபிப்பிராயம் மிக முக்கியம். பாடல் எழுதிய கவிஞருக்கு மட்டும் லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறோம். மலேசிய படப்பிடிப்பு பத்து லட்சம். பாடகர்களுக்கு ஒன்றேகால் லட்சம்... யோசித்துச் செய்யுங்கள் என்று நிர்வாகத்தயாரிப்பாளர் சொன்னார்.

பட வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட தினத்தன்று மூ.ரா விடமிருந்து வந்த போன் என்னைத் திடுக்கிட வைத்தது. நண்பரே நம் பட்த்தின் டி.வி.டி எப்போ கிடைக்கும். நான் கோபமானேன். தவறாக நினைக்க வேண்டாம். அம்மாவுக்கு காட்டணும்.உங்க தயாரிப்பாளர் ஆளும் கட்சிக்கு வேண்டியவர். அதனால மதுரைல டிவிடி வராது. அதனாலதான் கேட்டேன். என்று சொல்ல நான் அமைதியானேன்.

படம் வெளியான அன்று  அவர் முதல் வாழ்த்துச் சொன்னார். மதிய வாக்கில்
படம் நல்லா போகுதாமே, ஹிட்டுன்னு சொல்லுதாங்க என்றார். நீங்க பாக்கலையா’”””’’”” என்று கேட்டேன். அம்மாவுக்கு காட்டாம நா மட்டும் எப்படி பாக்கறது. டிவிடி வரட்டும். அம்மா பாக்கட்டும். அப்புறம் நாம பாக்கலாம். ஒரே போனுங்க நம்ம நடிப்ப பத்தி பாராட்டி. ரொம்ப நன்றி . பறக்கற மாதிரி இருக்கேன்.

அன்று மதியம் மூன்று மணிக்கு நாங்கள் அலுவலகத்தில் கூடினோம்.பாடல் காட்சிகளையும், மூ.ராவின் காட்சிகளையும் வெட்டுவது என்று தீர்மானிக்கப் பட்டது அன்று இரவுக் காட்சிகளில் அது இல்லை. நான் மூ.ராவிடம் பேச ஒரு மாதியாக இருந்தது. அவர் இரண்டு மூன்று முறை போன் செய்தார். நான் போனை அணைத்து வைத்துவிட்டேன்.


இணைய தளங்களில் எங்கள் படம் தரவிரக்கம் செய்யப்படுவதாக எங்கள் அலுவகத்திற்க்கு தகவல் வந்தது. அது எந்த ஊருக்கு அனுப்ப்ப்பட்ட பிரிண்டிலிருந்து அப்லோட் செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிய நான் அதனை டவுன்லோட் செய்தேன். அது வெளி நாட்டிற்க்கு நாங்கள் அனுப்பிய பிரிண்ட். எனக்கு அதை செய்ததில் ஒரு சந்தோஷம். மூ.ரா நடித்த அனைத்துக் காட்சிகளும் உள்ள டி.வி.டி எனக்கு கிடைத்துவிட்டது. அதை அனுப்பினால் அவர் அதை அம்மாவிற்கு காட்டி சந்தோஷப் படுவார். தமிழகத்தில் டிவிடி கிடைத்தாலும் அதில் அவர் நடித்த அனைத்து காட்சிகளும் இருக்காது. நான் சந்தோஷமாக மூ.ராவிற்க்கு போன் செய்தேன்,
அவர் போனை எடுக்க வில்லை. பலமுறை தொடர்பு கொண்டும் முடியாமல் செய்திஅனுப்பினேன் அது அவருக்கு போய்ச் சேரவே இல்லை. அடுத்தநாள் அது அணைத்துவைக்கப் பட்டிருந்தது. அவர் வருத்தத்திலிருப்பார் என்று புரிந்து கொள்ள முடிந்தது. நானும் தொடர்பு கொள்ளவில்லை. அவர் பேசட்டும் என்று காத்திருந்தேன். அவர் பேசினார். எனக்கும் அவருக்கும் நிகழ்ந்த பேச்சுக்கள் இதோ.

வணக்கம் தலைவரே
வணக்கம் நல்ல இருக்கீங்களா
இருக்கேன்
என்னாச்சு
அதவிடுங்க, படம் பார்த்தீங்களா?
நல்ல போகுதுன்னு கேள்விப்பட்டேன். குமுதத்ல ரொம்ப சிறப்பா எழுதியிருக்காங்களே.
நீங்க பாக்கலையா
பாத்தவங்க பலபேர் சொன்னாய்ங.
நீங்க பாக்கலையா?
இல்ல
ஏன்
டிவிடி கிடைக்கலையே...
கிடைச்சுடுச்சு.நீங்க நடிச்ச எல்லா சீனும் உள்ள டிவிடி கிடைசுடுச்சு. அனுப்பட்டுமா?
வேண்டாம்
ஏன்?
அம்மா பாக்கணும்னுதான் அத கேட்டேன்
இப்போ பாக்க சொல்லுங்க
அம்மா இல்லையே...
எங்க?
தவறிட்டாங்க... நா நடிச்சத பாக்கணூம் பாக்கணும்னு சொல்லிட்டிருந்துட்டு பாக்காமலேயே தவறிட்டாங்க...

மூ.ரா அழ ஆரம்பித்தார்.

 மறுபடி படம் பற்றி நாங்கள் பேசிக் கொள்ள வில்லை. அடுத்து நான் இயக்கப்போகும் படத்தில் ஒரு வேஷம் அவருக்குத் தருவதாகச் சொல்லியிருக்கிறேன். உன் இயக்கத்தில் வரப் போகும் படத்தைப் பார்க்க வேண்டும் என்று என் அம்மாவும் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.காலம் நகர்ந்துகொண்டிருக்கிறது.







2 comments:

  1. மீனுக்குள்கடல் nu oru kavithai puthagam vasichurukken athu ungaloda pathippa...?

    APPU

    ReplyDelete
    Replies
    1. இல்லை அது என் நண்பர் விஸ்வநாதன் என்ற பாதசாரி எழுதியது.

      Delete